×

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறி தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதித்தது தான் சாதனை

திருச்செந்தூர், ஏப்.3: மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறி தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதித்தது தான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை என திருச்செந்தூரில் டிடிவி தினகரன் பேசினார்.  திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வடமலைபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:  மத்திய அரசோடு இணக்கமாக செயல்படுவதால் பல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்திருப்பதாக முதல்வரும், துணை முதல்வரும் கூறுகின்றனர். அப்படி என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். மத்திய அரசிடம் பேசி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தந்தார்களா?, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என விலக்கு பெற்றார்களா? தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு வரவேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தரவில்லை என பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது பிரதமருடன் ஒரே மேடையில் அமர்ந்து கொண்டு தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருவதாக கூறுகிறார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறி மக்கள் விரும்பாத திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்தில் அனுமதித்துவிட்டனர். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்காத திட்டங்கள் அனைத்தையும் தற்போது அனுமதித்துள்ளனர். மத்திய பாஜக உதவியோடு 4 ஆண்டுகள் ஆட்சியை கடத்திவிட்டார்கள். இது தான் அவர்கள் செய்த சாதனை. வேறு எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை.  நாசரேத் நூற்பாலை நவீன தொழில் நுட்பத்துடன் திறந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் சிறுகுறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய உடனடியாக நடவடிக்கப்படும். எனவே ஜெ. ஆட்சி வர நீங்கள் வேட்பாளர் வடமலைபாண்டியனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு தினகரன் பேசினார்.

 இதில் அமமுக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் லெனின், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் புவனேஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், அமமுக ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், அம்மன் நாராயணன், ஷேக்தாவூது, ஆத்தூர் கார்த்திகேயன், நகர செயலாளர்கள் மணல்மேடு முருகேசன், சேகர், ராமச்சந்திரன், முருகானந்தம், மாவட்ட துணை செயலாளர் இல்லங்குடி, தகவல் தொழிற்நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணத்தி ரவி, தேமுதிக ஒன்றிய பொருளாளர் அபுதாஹீர், நகர செயலாளர் ஆனந்தராஜ், மாவட்டபிரதிநிதிகள் பேராச்சிசெல்வன், தாமோதரலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் பேச்சியம்மாள், ஒன்றிய மகளிரணி செயலாளர் பார்வதி உள்ளிட்ட அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். அப்போது நகரசெயலாளர் யாசின் உடனிருந்தார்.

Tags : Tamil Nadu ,Central Government ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...