திமுக தலைவரின் மகள் வீட்டில் ரெய்டு பாஜக, அதிமுகவின் திட்டமிட்ட சதி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி, ஏப். 3: திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பாஜக, அதிமுகவின் திட்டமிட்ட சதி என்றும், வருகிற தேர்தல் பாஜக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும்  புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்கிறது. அதேபோல், அவர்களது அலுவலகங்களில் சோதனை செய்யப்படுகிறது. இது பாஜக மற்றும் அதிமுகவின் திட்டமிட்ட சதி. அரசியல் தலைவர்களை பழிவாங்கும் நோக்கோடு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்ைத சேர்ந்தவர்களுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என மோடி அரசு, சோதனை என்ற பெயரில் இந்த வேலையை செய்து வருகிறது.

தேர்தல் நடக்கிற சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் தாக்கத்தை குறைப்பதற்காகவும், அவர்களுக்கு மனஉளைச்சலை உருவாக்கவும் இதுபோன்ற வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. அதற்கு அதிமுக உறுதுணையாக இருக்கிறது.  தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்ப வேண்டும் என்ற வகையில் இதுபோன்ற ரெய்டுகள் நடக்கின்றன. புதுச்சேரியில் கூட தொடர்ந்து  பல அரசியல் தலைவர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்களில் இவ்வளவு காலம் இல்லாமல், தேர்தல் சமயத்தில் சோதனை செய்யப்படுகிறது. தேவையில்லாமல் வியாபாரிகள், அரசியல் தலைவர்களுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற போர்வையில் சோதனை செய்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்றார்.

Related Stories:

>