கிருஷ்ணகிரி அருகே குறைந்த மின்னழுத்த விநியோகத்தால் அவதி

கிருஷ்ணகிரி, ஏப்.3: கிருஷ்ணகிரி அருகே குறைந்த மின்னழுத்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட தானம்பட்டி சாலை, சாமி நகர், பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த பல மாதங்களாக குறைந்த மின்னழுத்த சப்ளை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் டிவி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தண்ணீர் மோட்டார்கள் பழுதாகியும், ஏ.சி., உள்ளிட்டவைகள் பல நேரங்களில் வேலை செய்யாமலும் உள்ளது. 103-160 வோல்ட் மின்சாரம் மட்டுமே வருவதால் மின்சாரம் போதுமானதாக இல்லை.

இது குறித்து பலமுறை மின்வாரியத்திடம் முறையிட்டும், தேவையான நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய அதிகாரிகள் மெத்தன போக்கில் உள்ளனர். இந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக கம்பம் நடப்பட்டு ஓராண்டு ஆகியும் டிரான்ஸ்பார்மர் அமைக்கவில்லை. கோடைக்காலம் நெருங்குவதால் வீட்டில் பேன் சரியாக ஓடாமல் மக்கள் புழுக்கத்தில் தவித்து வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>