மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் குன்னூர் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் சூறாவளி பிரசாரம்

ஊட்டி,ஏப்.3:மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டேரி, கரும்பாலம், கோடேரி, கொல்லிமலை, சேமந்தாடா, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. தேர்லுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் நகரம், குன்னூர் ஒன்றியம், மேலூர் ஒன்றியம், கீழ்கோத்தகிரி, கோத்தகிரி ஆகிய ஒன்றிய பகுதிகளிலும் நகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நாள் தோறும் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டேரி, கரும்பாலம், கோடேரி, கொல்லிமலை, சேமந்தாடா, கேத்தி பாலாடா, செல்வீப் நகர், கோலனிமட்டம், காட்டேரிவில்லேஜ் போன்ற பகுதிகளில் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: திமுக., அரசு எப்போதும் மக்களுக்கான அரசாகவே இருந்துள்ளது.

அடித்தட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. திமுக., தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, நீலகிரி மாவட்டத்தில் தொலை தூரங்களில் உள்ள வீடுகளுக்கு, தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி காத்தார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. திமுக., தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தவுடன்  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை காக்கும் வகையில், பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.30 பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறும் வகையில், குன்னூரில் அரசு கலைக்கல்லூரி ஒன்று அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குன்னூர் நகரில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைத்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது, மேலூர் ஒன்றிய செயலாளர் உதயதேவன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Related Stories:

>