×

கடந்த 4 நாட்களாக மின் விநியோகம் துண்டிப்பு துணை மின்நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஏப்.3: தண்டராம்பட்டு அருகே கடந்த 4 நாட்களாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து, துணை மின்நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து, தானிப்பாடி, பெருங்குளத்தூர், சாத்தனூர், வாணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி தண்டராம்பட்டு துணை மின்நிலையத்தில் உள்ள மின்சாதன பொருள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதனை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மேற்கண்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நாராயணகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளிடம், `கடந்த 4 நாட்களாக எங்களது கிராமத்திற்கு மின் விநியோகம் செய்யப்படவில்லை.நிலத்தில் நெல்மணிகள் முற்றி வரும் நிலையில், மின் தடையால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. வீடுகளிலும் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் புழுக்கத்தில் தவித்து வருகிறோம். உடனடியாக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அதற்கு மின்வாரிய அதிகாரிகள், துணை மின்நிலையத்தில் மின்சாரம் பகிர்ந்து அளிக்கும் மின்சாதன பொருள் ஒன்று பழுதடைந்துள்ளது. அதற்கான மாற்று பொருள் நாளை (இன்று) காலை வந்து விடும். பொருள் வந்ததும் அதனை பொருத்தி தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tandarampatti ,
× RELATED குட்டையில் மூழ்கி தாய், மகள் பலி...