×

கூடுதல் தேர்தல் அலுவலர் ஆய்வு பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூர்,ஏப்.3: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக் கப்பட்டது. இன்று (3ம்தேதி) இரவு உயிர்ப்புப் பெருவிழாவான ஈஸ்டார் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்ப்பையும் நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 17ம்தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், புனித வாரத்தின் மிகமுக்கிய நாளான நேற்று (2ம்தேதி) இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் உயிர்நீத்ததை நினைவு கூறும் புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இயேசு உயிர்நீத்த மாலை 3 மணிக்கு அவரது பாடுபட்ட சொரூபம் துணியால் மூடிவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தேவாலய வளாகங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, சிறப்பு பிரார்த்தனையுடன் நடத்தப்பட்டது.

இதன்படி பெரம்பலூர் புனித பனியமய மாதா தேவாலயத்தில், பெரம்பலூர் மறைவட்ட முதன்மைகுரு ராஜமாணிக்கம் தலைமையில் திருப்பலியுடன் சிலுவைப் பாதை, திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூர், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், பாடாலூர், எறையூர் ஆகிய ஊர்களில் கத்தோலிக்க தேவாலயங்களில் புனித வெள்ளி சடங்குகள் திருப்பலியுடன் அந்தந்த பங்கு குருக்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்டன.இன்று (3ம்தேதி) இரவு 11.30 மணியளவில் இயேசு உயிர்த்து எழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை (4ம்தேதி) காலை ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Christian ,Perambalur District ,
× RELATED புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ...