×

திருப்போரூர் அருகே ₹24 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்: வாக்காளர்களுக்கு வினியோகமா? விசாரணை

திருப்போரூர், ஏப். 3: திருப்போரூர் அருகே ₹24 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய இருந்ததா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு கொடுக்க மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மறைவான இடத்தில் இருந்த சிலர், போலீசாரை கண்டதும், தலைதெறிக்க ஓடினர். உடனே போலீசார், அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு, 4 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது சுமார் 200 குவாட்டர் மது பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. உடனடியாக பறக்கும் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த பறக்கும்படை போலீசாரிடம், மதுபாட்டில்களை ஒப்படைத்தனர்.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் செய்த மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்தார்களா, தேர்தல் வருவதையொட்டி வாக்காளர்கள் வினியோகம் செய்ய இருந்ததா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Thiruporur ,
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...