×

அகரம் காலனியில் அவலம் மாட்டு தொழுவமாக மாறிய மினி மோட்டார் தொட்டி: ஒரு ஆண்டாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத், ஏப்.2: வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில் கடந்த ஒரு ஆண்டாக பழுது பார்க்காத மினி மோட்டார் தொட்டி, தற்போது மாட்டு தொழுவமாக மாறிவிட்டது. இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் மூலம் தினமும் சுழற்சி முறையில், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் மோட்டார் பழுது, பைப்லைன் உடைப்பு பிரச்னைகளால், பொதுமக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க தெருக்கள் தோறும் மினி மோட்டார் தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வராத நேரத்தில், இந்த மினி மோட்டார் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும். ஆனால், இந்த தொட்டியை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மினி மோட்டார் தொட்டி கடந்த ஒராண்டுக்கு முன் பழுதடைந்தது. இதுபற்றி பலமுறை, அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதனை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், பொதுமக்களுக்கு குடிநிர் விநியோகிக்கப்படும். ஆனால் அந்த தண்ணீரும் சரிவர கிடைப்பதில்லை. இதனால், இப்பகுதியில் மினி மோட்டார் தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனபடி, ஒன்றிய அலுவலகம் சார்பில் இப்பகுதியில் மினி மோட்டார் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அதனை  ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், கடந்த ஒராண்டுக்கு முன்பு இந்த மோட்டார் பழுதாகி  கிடப்பில் போடப்பட்டது. அதை அதிகாரிகள் சீரமைக்காமல் விட்டதால், தற்போது இந்த இடம் கால்நடைகள் கட்டுவதற்கான மாட்டு தொழுவமாக மாறிவிட்டது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. வரம் கோடை காலங்களில் குடிநீருக்காக, பொதுமக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை ஏற்படுவதற்கு முன், மினி மோட்டார் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒன்றிய நிர்வாகம் மெத்தனத்தை கைவிட்டு உடனடியாக இந்த மினி மோட்டார் டேங்க்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Agaram Colony ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...