குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின்கீழ் வளர்ப்பு பெற்றோரிடம் சிறுவர்கள் ஒப்படைப்பு

காஞ்சிபுரம், ஏப்.2: குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின்கீழ், வளர்ப்பு பெற்றோரிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் சிறார் பாதுகாப்பு மையம் செயல்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுமம் செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் இயங்குகிறது. பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த பராமரிப்பு இல்லத்தில் தங்கி வளர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் சிறுவர்களை வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின்கீழ் பெற்றோர்களிடம் குழுமத்தின் முன்னிலையில் ஒப்படைத்தனர். குழந்தைகள் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலரின் அறிவறுத்தல், மாநில தத்தெடுப்பு மையத்தின் வழிகாட்டுதலின்படி வளர்ப்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.  

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளை தொடர்புகொண்டு வளர்ப்பு பெற்றோர்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கரூர் மாவட்டத்துக்கு ஒரு சிறுமியும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு 2 சிறுமிகளும், செங்கங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒரு சிறுவனும், மூன்றாம் பாலினமான ஒரு சிறாரும் வளர்ப்பு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்படைப்பு நிகழ்ச்சியில், குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் ராமச்சந்திரன், குழும உறுப்பினர்கள் சக்திவேல், நிர்மலா, தாமோதரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மதியழகன், சம்பத் குமார், நந்தினி ஆகியோர் இருந்தனர்.

Related Stories:

>