திருச்சியில் பரபரப்பு ஏடிஎம்மில் பணம் அபேஸ் செய்து நாடகமாடிய 4 வடமாநில வாலிபர் கைது

திருச்சி, ஏப்.2: திருச்சியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.19,500 பணத்தை எடுத்துக்கொண்டு இயந்திரத்தை ஆப் செய்துவிட்டு நாடகமாடிய 4 வடமாநில வாலிபர்களை கைது செய்தனர். திருச்சி ராமலிங்கா நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. அல்லித்துறை ரோடு எம்ஜிஆர் நகரை சேர்ந்த சூர்ஸ் (44) என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், கடந்த 9ம் தேதி ராமலிங்கா நகரில் உள்ள எங்களது வங்கி கிளை ஏடிஎம்மில் வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் பணம் எடுக்க சென்றனர். அப்போது மெஷின் ஆப் ஆகிவிட்டது. அதனால் தங்கள் பதிவு செய்த ரூ.19,500 பணம் வரவில்லை. ஆனால் கணக்கில் பணம் எடுத்ததாக வந்துள்ளது என கூறினர். ஆனால் அவர்கள் சந்தேகப்படும்படி இருந்ததால், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து உறையூர் குற்றப்பிரிவு எஸ்ஐ பாத்திமா வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், 2 பேர் முதலில் வந்து பணம் எடுக்கும்போது ஒருவர் மட்டும் ஏடிஎம் மெஷின் பின்னால் சென்றதும் மெஷின் ஆப் ஆகிவிடுவதும் ஒருவர் பணத்தை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைப்பதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெரியவந்தது. அதையடுத்து நேற்று 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ராஜஸ்தான் பரல்பூரை சேர்ந்த சாகுல் (26), அப்பாஸ்கான் (22), அரியானா மாநிலம் தேவுலா பகுதியை சேர்ந்த அப்ரோச் (21), அர்பாத் (25) என்பது தெரியவந்தது. துணி வியாபாரத்துக்கு வந்த அவர்களுக்கு வருமானம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 4 பேரும் ஏடிஎம் வந்து பணம் எடுக்க கார்டை நுழைத்ததும் பணம் வரும்போது, இயந்திரத்தின் பின்புறம் சென்று கள்ளச்சாவி போட்டு இயந்திரத்தை ஆப் செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>