×

7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையம் விருதுநகரில் இடமாற்றம்

விருதுநகர், ஏப்.2:  விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர்(தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இதுவரை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, செந்தில்குமார் நாடார் கல்லூரிகளில் நடைபெறுவது வழக்கம்.  இம்முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் அமைக்கப்படும் 14 டேபிள்களுக்கான இடைவெளியை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் 14 டேபிள்களை 7 ஆக குறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வந்த இரு மையங்களில் இடப்பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு பெரிய அளவிலான அறை அமைப்பை உடைய விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியை வாக்கு எண்ணிக்கைக்கு தேர்வு செய்து ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்.6ல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடைபெற உள்ளது. 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறைகள், வாக்கு எண்ணிக்கை அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவித்யா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கான குடிநீர், தடையில்லா மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் ஆகியவற்றை கலெக்டர் கண்ணன், எஸ்பி பெருமாள் ஆய்வு செய்தனர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர். ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியின் முன்பகுதியில் சிவகாசி ரோடு, பக்கவாட்டில் அழகாபுரி ரோடு, ஒரு கி.மீ தூரத்தில் நான்கு வழிச்சாலை உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதம் மற்றும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு