திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களைப்போல ஆண்களுக்கு சுயஉதவிக்குழு அமைக்கப்படும் வாக்கு சேகரிப்பின்போது கனிமொழி எம்பி பேச்சு

தேவாரம், ஏப். 2: திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களைப் போல ஆண்களுக்கு சுய உதவிக்குழு அமைக்கப்படும் என, திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். கம்பம் தொகுதி திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி தேவாரத்தில் பேசியதாவது: தமிழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக திமுகவிற்கு வாக்களியுங்கள். ஜெயலலிதா இறந்த பிறகு அமைக்கப்பட்ட விசாரணை கமிசனில்ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்? இவர், தேனி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை.தமிழகத்தில் வேலைவாய்ப்புகளில் யாரும் தேர்வு எழுதி வேலைக்கு வரலாம் என்று அதிமுக அரசு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனால், தமிழக இளைஞர்களின் வேலையை வடமாநில இளைஞர்கள் பறிக்கின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன், வேலைவாய்ப்பற்ற 3.50 லட்சம், தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் சுயஉதவிகுழு போல ஆண்கள் சுய உதவி குழுவும் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு ரத்து செய்ய தொடர்ந்து பாடுபடுவோம்.. குடும்ப பெண்களுக்கு மாத ஊதியம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். முல்லை பெரியாறு அணை மிகவும் பிரதானமாக உள்ளது. பேபி அணையை பலப்படுத்தி 152 அடி தண்ணீர் தேக்கப்படும். இதனால் விவசாயம் மட்டும் அல்லாமல் குடிநீர் பிரச்சனையும் தீரும். தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டுச்சாலை அமைக்கப்படும். தொழிற்பேட்டை அமைக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு பேசினார்.

Related Stories:

>