×

ஓபிஎஸ் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அதிமுக தொண்டர்களை குஷிப்படுத்த மது சப்ளை காலையிலேயே வழங்கும் கட்சியினர்

தேனி, ஏப். 2: போடி தொகுதிக்குட்பட்ட பூதிப்புரம், பழனிசெட்டி மற்றும் தேனியில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அதிமுக தொண்டர்களுக்கு, அதிகாலையிலேயே கட்சிக்காரர்கள் மது விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 3 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தபோதும் தேர்தலின்போது, அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தொகுதியில் வாக்குகேட்டு செல்லும்போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஓபிஎஸ் வாக்கு கேட்டு செல்லும் பகுதிகளுக்கு ரூ.500 கொடுத்து ஆட்களை திரட்டி செல்லும் நிலை உள்ளது. இருந்தபோதும் வாக்கு கேட்டுச் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும், அடிப்படை வசதிகள் செய்யாதது குறித்தும் கேள்விகளை கேட்டு ஓபிஎஸ்சை தெறிக்கவிடுகின்றனர்.
 
அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டிய பெண்களே ஓபிஎஸ்சுக்கு எதிராக திரும்பியுள்ளதால், போடித் தொகுதியில் பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி பகுதிகளில் அதிமுக தொண்டர்களுக்காக மது சப்ளையும் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மட்டுமே நடக்க வேண்டும் என்ற நிலையில், பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி, போடித் தாகுதியை ஒட்டியுள்ள தேனி நகரில் பழைய பஸ் நிலைய பகுதிகளில் அதிகாலை முதலே டாஸ்மாக் கடை திறக்கும் முன்பாக கள்ளத்தனமாக அதிமுகவினர் சிலர் மது விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. அதிமுகவினர் மது விற்பனை செய்யும்போது, போடித்தொகுதியில் உள்ள அதிமுகவினராக இருந்தால் இலவசமாகவும் மது சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆளும்கட்சியினர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க போலீசார் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் மது விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : AIADMK ,OPS ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...