×

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4 தொகுதிகளில் 3,000 போலீசார் குவிப்பு பதற்றமான வாக்குச்சாவடிகள் தீவிர கண்காணிப்பு

சிவகங்கை, ஏப்.2: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஏப்.6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, மானாமதுரை(தனி), திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 163 வாக்குச்சாவடிகள் பத்தட்டமானவை என்பதால் தீவிர கண்காணிப்பில் உள்ளன. மாவட்டத்தில் சிவகங்கையில் 3, மானாமதுரை 2, காரைக்குடி 3, தேவகோட்டை 2, திருப்பத்தூரில் 3 என மொத்தம் 13 செக் போஸ்டுகள் உள்ளன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஒரு துணை ஆணையர் தலைமையில் 159 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் மாவட்ட எல்கையில் உள்ள செக் போஸ்டுகள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் இணைந்து வாகன பரிசோதனையிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.  சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றுபவர்கள், ஆயுதப்படை உள்ளிட்ட மாவட்ட போலீசார் ஆயிரத்து 920 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊர்க்காவல் படை, தீயணைப்பு, முன்னாள் படை வீரர், தேசிய தொண்டர் படை உள்ளிட்ட 930 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  ஒட்டுமொத்தமாக 3 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் சார்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், சாதிரீதியாக பிரச்சினைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர். தற்போது அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. பிற வாக்குச்சாவடிகளில் சாதாரண போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ