குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் 5 தொழிலாளர்கள் மீட்பு

மதுரை, ஏப்.2:  குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் 5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் தலைவர்-மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986ன் கீழ் சிறப்பாய்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்.1ம் தேதி வரை ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள், சைல்டுலைன் உறுப்பினர்கள், அனைவருக்கும் கல்வித்திட்டம், சிறப்பு சிறார் நல காவல் நலப்பிரிவு மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு காவலர்களை கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

387 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மதுரை மாட்டுத்தாவணி, மேலமாசி வீதி, தல்லாகுளம், தபால்தந்தி நகர் போன்ற பகுதிகளில் 5 வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அந்நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ், 14 வயது நிரம்பாத குழந்தைகளை அனைத்துவிதமான பணிகளிலும், 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது இரண்டாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.மேலும் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை சட்டத்திற்கு முரணாக பணி செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் சட்டப்படி அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் விதிக்க வழிவகை  உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>