×

கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்வு

மதுரை, ஏப்.2: மதுரையில் புனித வியாழனையொட்டி, நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்கால நிறைவு வாரமாக கடந்த ஞாயிற்று கிழமை குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்வு நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி தினத்திற்கு முந்தைய நாளில் தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிடுவார். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நேற்று ஆலயங்களில் உள்ள 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது பாதங்களை பங்குத்தந்தை கழுவி முத்தமிடும் நிகழ்வு மதுரையின் அனைத்து ஆலயங்களிலும் நடந்தது. மதுரையில் கீழவாசல் புனித  மரியன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி  பக்தர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். தொடர்ந்து ஞான ஒளிவுபுரம் புனித  வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை செபஸ்தியான், பாஸ்டின் நகர் தூய பவுல்  ஆலயத்தில் பங்குத் தந்தை ஜெயராஜ், மற்றும் அனைத்து ஆலயங்களிலும்  பங்குத்தந்தையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நபர்களின் பாதம் கழுவி  முத்தமிடும் நிகழ்வில் பங்கேற்றனர். நள்ளிரவு 12 மணி வரை அமைதியான முறையில் நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது.

இன்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை புனித வெள்ளியை ஒட்டி அமைதியான முறையில் ஆராதனையும், பின்னர் இயேசு சிலுவையில் அறையப்படும் நிகழ்வை தியானிக்கும் விதமாக சிலுவை பாதை ஜெப வழிபாடும் தொடர்ந்து பாஸ்கா திருவழிபாடும் நடைபெற்று ஆலயங்களில் உள்ள இயேசு சிலுவையில் அறைப்பட்ட சொருபங்கள் வெண்ணிற துணியால் மூடப்பட்டு ஆலயங்களும் மூடப்பட்டிருக்கும். தொடர்ந்து நாளை இரவு 11.30 மணிக்கு ஈஸ்டர் திருவிழா திருப்பலி நடைபெற்று அத்துடன் கிறிஸ்தவர்கள் தங்கள் தவக்காலத்தை நிறைவு செய்கின்றனர்.

Tags : Holy Thursday ,
× RELATED புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ...