×

பங்குத்தொகை தராமல் இழுத்தடித்த அதிமுக முடக்கப்பட்ட பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டம் செயல்படுத்த முன் வருவார்களா மக்கள் பிரதிநிதிகள்

பழநி, ஏப். 2: பங்குத்தொகை தராமல் அதிமுகவினால் முடக்கப்பட்ட 100 ஆண்டுகால கனவு திட்டமான பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டம் பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டம். 1915ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. திண்டுக்கல் பகுதியில் அதிகளவு நெல், பருத்தி மற்றும் மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவைகளை விற்பனை செய்ய, வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல இதுநாள் வரை லாரி போன்றவைகளே அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து செலவு கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்த விலைக்கு இங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுபோல் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அநேக பகுதிகளில் விசைத்தறி தொழில் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், பெட்ஷீட், ஜமுக்காளம் போன்றவை அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதுபோல் பழநி நகருக்கு வடமாநிலங்களுக்கான இணைப்பு ரயில்கள் இல்லாததால் தற்போது வடமாநில பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. எனவே, ஆங்கிலேயர் காலத்தில் உண்டாக்கப்பட்ட பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து முதல்கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது. தொடர்ந்து 2006, 2008ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த சர்வே பணி நடத்தப்பட்டு ரூ.380 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பின்னர் 2010, 2011, 2012 ஆண்டுகளில் மத்திய அரசு இத்திட்டத்திற்கு முறையே ரூ.40 கோடி, ரூ.33 கோடி, ரூ.12 கோடி என ரூ.85 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதன்பிறகு இத்திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பழநியில் இருந்து தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக 91.5 கிலோமீட்டர் தொலைவில் ஈரோட்டிற்கு ரயில்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 6 பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரயில்வே கேட் அமைக்கப்பட உள்ளது. கடைசியாக இத்திட்டத்தின் இறுதிகட்ட சர்வே பணி, நில கையகப்படுத்தும் பணி நடந்தது. இத்திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்குத்தொகை தர வேண்டும். ஆனால், அதிமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதனால் இத்திட்டம் தற்போது முடங்கிப்போய் உள்ளது. 2021ல் பொறுப்பேற்கும் புதிய அரசு பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பழநி- ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ளது.

இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது, நீண்ட நாட்களாக இத்திட்டம் கிடப்பில் உள்ளது. மாநில அரசின் பங்குத்தொகை தருவதில் இழுபறியாக இருப்பதாகவும், நிலம் கையகப்படுத்துவதில் மெத்தனம் நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில்தான் பழநி வழித்தடம் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு, சென்னை உள்ளிட்ட பல ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக இத்திட்டம் நி றைவேற்றப்படும். மேலும், பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,Palani ,Erodu ,
× RELATED பழநி பங்குனி உத்திரத் திருவிழா அன்னதான மையங்களில் ஆய்வு