×

மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

உடுமலை, ஏப். 2: மடத்துக்குளம்  தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று தொகுதியில் பல்வேறு  இடங்களில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். குமரலிங்கம்  பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கை துண்டு  பிரசுரத்தை வழங்கி பிரசாரம் செய்தார். கடை வீதியிலும் நடந்து சென்று வாக்கு  சேகரித்தார். ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே  அங்கிருந்தவர்களிடம் பேசினார். முதியோர்களிடமும் திமுகவுக்கு  வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் வல்லக்குண்டாபுரம்,  ஜிலேப்பநாயக்கனூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக  ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4  ஆயிரம் வழங்கப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும். காஸ்  சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். வேலைவாய்ப்பில் பெண்களுக்கான  இடஒதுக்கீடு 40 சதவீதம் ஆக அதிகரிக்கப்படும்.

பெண்களுக்கு பேறுகால விடுமுறை  12 மாதங்களாக உயர்த்தப்படும். இந்து கோயில்களை குடமுழுக்கு செய்ய ரூ.1000  கோடி ஒதுக்கப்படும். மசூதி,தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி  ஒதுக்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு  ஊழியர்களாக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறு, குறு  விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.  தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும். 500 இடங்களில் கலைஞர்  உணவகம் ஏற்படுத்தப்படும். 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக்கடனை  அரசே திருப்பி செலுத்தும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75  சதவீதம் வேலைவாய்ப்பு தமிழகர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும். எனவே,  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

Tags : DMK ,Madathukulam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்