×

நீலகிரியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

ஊட்டி, ஏப்.2: நீலகிரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படும் என குன்னூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குன்னூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத், ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் போஜராஜ் ஆகியோரை ஆதரித்து குன்னூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த மாவட்டம் நீலகிரி மாவட்டம். அதேபோல்,  எனக்கும் நீலகிரி மாவட்ட மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் அதிமுகவின்  கோட்டையாக மாற மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். 2011ம் ஆண்டு தேர்தலின்போது ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களின் நலன் கருதி 5 லட்சத்து 23 ஆயிரத்து 100 பேருக்கு ரூ.1330 கோடி செலவில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. 2011ம் ஆண்டு வரை தமிழகத்தில் மின் பிரச்னை இருந்து வந்தது. ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் மின்மிகை மாநிலமாக மாற்றினார்.

கொரோனா பாதித்த காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று, பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாரிசு இல்லை. நாம்தான் வாரிசு. எனவே, மீண்டும் அவரது ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர நாம் பாடுபடவேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஈழுவா, தியா மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குன்னூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு தற்போது தாராளமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் பண்டிகைக்கு அதிமுக அரசுதான் விடுமுறை அளித்துள்ளது. படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, படுகர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரி ரூ.445 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அனைத்து மக்களுக்கும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். பெண்களின் பணிச்சுமையை குறைக்க வாஷிங்மெஷின் வழங்கப்படும். மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் குடும்பப் பெண்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் அளிக்கப்படும். பெட்டிக்கடை வைக்க ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...