×

பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வியாழன் வழிபாடு பக்தர்கள் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது

பெரம்பலூர்,ஏப்.2: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில் புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறு கடந்த 28ம்தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று தன்னையே தாழ்த்திக் கொள்பவன் உயர்த்தப்படுவான் என்பதன் அடையாளமாக இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டதையும், தான் கைது செய்யப்படுவதற்கு முன் கடைசியாக சீடர்களுடன் இரவு உணவருந்திய நிகழ்வையும் நினைவுபடுத்தும் புனித வியாழன் கிறிஸ்தவ தேவாலயங்களில் அனுசரிக்கப்பட்டது.
இதன்படி பெரம்பலூர் புனித பனியமய மாதா தேவாலயத்தில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருராஜ மாணிக்கம் தலைமையில் திருப்பலியுடன் பாதம் கழுவி முத்தமிடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதேபோல் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூர், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், பாடாலூர், எறையூர் ஆகிய ஊர்களில் கத்தோலிக்க தேவாலயங்களில் புனித வியாழன் சடங்குகள் திருப்பலியுடன் அந்தந்த பங்கு குருக்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்டன. இன்று (2ம்தேதி) இயேசு சிலுவையில் உயிர்நீத்த புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு, 4ம்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Holy ,Perambalur ,
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...