தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் பொருத்தும் பணி நிறைவு

புதுக்கோட்டை, ஏப். 2: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியை கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெல் பொறியாளர்கள் மூலமாக விவிபேடில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி, மாவட்டம் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியானது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் முகவர்கள் முன்னிலையில மண்டல அலுவலர்கள் மூலமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரமானது சீல் வைத்து காவல்துறை பாதுகாப்புடன், பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.இதைதொடர்ந்து மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் அதிகளவில் பறக்கும் படைகள், கண்காணிப்புக்குழு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 3 சுழற்சி முறையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களை கண்காணிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் அளவிலான அலுவலர்கள் அமைக்கப்பட்டு பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் இவர்களுக்கு தகவல்கள் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தங்களது பணியில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் மற்றும் எஸ்பியால் திடீர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று மாவட்ட அளவிலான மண்டல அலுவலர்கள் மூலமாகவும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.முன்னதாக திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நமணசமுத்திரம், திருமயம் மதுரை ரோடு பிரிவு பகுதிகளில் வாகன சோதனையை கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

Related Stories:

>