×

அறந்தாங்கி அருகே அதிமுகவினர் அராஜகம் திமுக கூட்டணி கட்சியினரை தாக்கி கார், பைக்குகள் உடைப்பு

அறந்தாங்கி, ஏப்.2: அறந்தாங்கி தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு ஆதரவு கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி நேற்று மணமேல்குடி ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சென்றனர். அவர்கள் அம்மாபட்டினத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு கோட்டைப்பட்டினம் நோக்கி சென்றனர். அப்போது வடக்கு புதுக்குடி மற்றும் தெற்கு புதுக்குடி பகுதிகளில் பிரசாரம் செய்ய வந்த அதிமுக வேட்பாளர் ராஜ நாயகத்திற்காக காத்திருந்த அதிமுக கூட்டணி கட்சியினர் சாலையை மறித்தபடி நின்றுள்ளனர். அப்போது திமுக கூட்டணியினர் வந்த பைக்குகளுக்கு அதிமுக கூட்டணியினர் வழி விடவில்லை என கூறப்படுகிறது. தாங்கள் கோட்டைப்பட்டினம் செல்ல வழி விடுங்கள் என திமுக கூட்டணி கட்சியினர் கேட்டதற்கு ஆத்திரமடைந்த அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணி கட்சியினரை தாக்கினர். இதில் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சேக் தாவுது உள்ளிட்ட சிலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணி கட்சியினரின் பைக்குகள் மற்றும் காரை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டைப் பட்டினத்தில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களுடன் கோட்டைப்பட்டினம் டி.எஸ்பி சிவராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மறியல் கைவிடப்படாமல் தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சியினர் மீது அதிமுக கூட்டணி கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,Aranthangi ,DMK ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு