×

குமரியில் போலீஸ் தபால் வாக்குகள் குறைந்த அளவே பதிவு ஓட்டு இல்லை என பலரை திருப்பி அனுப்பினர்

நாகர்கோவில், ஏப்.2 : குமரியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடந்தது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களுக்கு கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மார்த்தாண்டம் நேசமணி கலைகல்லூரியிலும், கிள்ளியூர் மற்றும் குளச்சல் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு கருங்கல் பெத்லகேம் பள்ளியிலும் வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் வாக்கு பதிவு மையத்தில் வாக்களிக்க வந்த ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினருக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. இது குறித்து தேர்தல் பணியாளர்களிடம் கேட்டபோது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர். இதனால் காலை முதல் நீண்ட நேரம் காத்திருந்த பலர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இது தவிர பணியில் உள்ள போலீசார் பலருக்கு பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறி வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

சுமார் 5 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள துணை ராணுவத்தினர் தவிர்த்து பார்த்தால், குமரி மாவட்ட காவல்துறையில் சுமார் 4500 தபால் ஓட்டுக்கள் உண்டு. ஆனால் சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை நாகர்கோவில் சட்டமன்றத்தில் 218 வாக்குகளும், கன்னியாகுமரி சட்டமன்றத்தில் 369 வாக்குகளும், குளச்சல் சட்டமன்றத்தில் 386 வாக்குகளும், பத்மநாபபுரம் சட்டமன்றத்தில் 288 வாக்குகளும் கிள்ளியூர் சட்டமன்றத்துக்கு 268 வாக்குகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 392 வாக்குகளும் என மொத்தம் 1921 வாக்குகள் பதிவாகியுள்ளன.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு நாகர்கோவிலில் 217 வாக்குகளும், கன்னியாகுமரியில் 369 வாக்குகளும், குளச்சல் தொகுதியில் 386 வாக்குகளும், பத்மநாபபுரத்தில் 290 வாக்குகளும், கிள்ளியூரில் 268 வாக்குகளும், விளவங்கோடு தொகுதியில் 389 வாக்குகளும் என மொத்தம் 1919 வாக்குகள் பதிவாகி உள்ளன.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து