×

நாகர்கோவில் தொகுதியில் சுற்றுப்பயணம் விஜய்வசந்த், சுரேஷ்ராஜன் இணைந்து வாக்கு சேகரிப்பு

நாகர்கோவில், ஏப்.2: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் ஆகியோர் கடைசி கட்ட சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்செல்வவிளை பகுதியில் நேற்று காலையில் பிரசாரத்தை தொடங்கினர். மேலச்சங்கரன்குழி, எள்ளுவிளை, ராஜாக்கமங்கலம் ஊராட்சி பகுதி கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், வைகுண்டதாஸ், வக்கீல் காமராஜ், முன்னாள் வட்டார தலைவர் முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் சற்குருகண்ணன், பேரூர் செயலாளர் பிரபா எழில், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது சுரேஷ்ராஜன் பேசியதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளார். அவை திமுக ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.  பாம்பன்விளையில் இருந்து வேம்பனூருக்கு செல்வதற்கு பன்றிவாய்க்கால் குறுக்கே இணைப்பு பாலம் கட்டித்தரப்படும். தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கோயில், குளங்களும் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சியை அழகுபடுத்தி ஸ்மார்ட் அன்ட் கிளீன் சிட்டி ஆக மாற்றப்படும். நாகர்கோவில் குறுக்கு சாலையில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்.  வடசேரி அசம்பு ரோட்டிற்கு நாகர்கோவில் நகராட்சியின் முதல் தலைவர் வடசேரி நயினார் பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய்வசந்த் பேசியதாவது:  கூட்டணி பலம், ஆளும் கட்சிகள் மீதான மக்களின் எதிர்ப்பு இக்கூட்டணியை மகத்தான வெற்றிபெற செய்யும்.
தேர்தல் களத்தில் இரண்டு கட்சிகளாக பார்க்கும்போது காங்கிரஸ் கை ஓங்கி நிற்கிறது. மத்திய அமைச்சரா? எம்.பி.யா? என்று கேட்பது மக்களை அழுத்தம் கொடுப்பது போன்றாகும். ஆளும் கட்சியில் இல்லாவிட்டால் நீங்கள் மக்களுக்கு எதையும் செய்ய மாட்டீர்களா? குமரி மாவட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் சாலை பணிகள் திட்டத்தை கொண்டு வந்தவர்கள், 2019ல் இந்த பணிகளை நிறுத்தியும், தொய்வடையவும் செய்தனர். இதனால் திட்டம் பாதியில் நிற்கிறது. பா.ஜ., வெற்றிபெறவில்லை என்பதற்காக மக்களை பழி வாங்குகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் ரிந்துகொண்டுள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மாலையில் கோணம் குருசடி, அனந்தன்பாலம், ஆசாரிபள்ளம், பெருவிளை, பார்வதிபுரம், நேசமணிநகர், புன்னைநகர், சற்குணவீதி, செட்டிக்குளம், மங்களா தெரு, கிறிஸ்துநகர், காமராஜபுரம், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தனர்.

Tags : Nagercoil ,Vijayvasant ,Sureshrajan ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு