×

கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி கொண்டாட்டம் பாதங்கள் கழுவும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது

நாகர்கோவில், ஏப். 2: இயேசு கிறிஸ்து சிலுவை பாடுகளை கடந்து சிலுவையில் அறையப்பட்டு, அதன்பின்னர் 3ம் நாள் உயிர்த்து எழும் பண்டிகை ஈஸ்டராக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமசை அடுத்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சாம்பல் புதன் அன்று தொடங்கி 41 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாகும். இதில் குருத்தோலை ஞாயிறு, அதனை தொடர்ந்து பெரிய வியாழன், இயேசு சிலுவையில் அறைப்பட்ட பெரிய வெள்ளி ஆகியவை முக்கிய தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும் முன்பு, அவரை எருசலேம் நகரின் வீதிகளில் கழுதை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வீதிகளில் நின்ற மக்கள், ஒலிவ மரக்கிளைகளை கைகளில் தாங்கி ஒசன்னா பாடினர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவலாயங்களிலும் கடந்த ஞாயிற்று கிழமை குருத்தோலை ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது. ஏசுவின் திருப்பாடுகளை உருக்கமாகத் தியானிக்கும் இந்தப் புனித வாரத்தில் இறுதி மூன்று முக்கிய புனித நாளாகும். பிறர் வாழ தன்னையே வழங்குவதுதான் தெய்வீகம் என்பதை, நமக்கு உணர்த்த, ஏசு தனது ரத்தத்தையும் நமக்கு உணவாகத் தந்தார்.

ஏசு நம் மீட்புக்காக தம்மையே வழங்கியதுபோல, நம் அயலவர்களை அன்பு செய்து வாழவும் நம்மைப் பணிக்கின்றார் ஏசு. சீடர்களின் பாதங்களைக் கழுவிய ஏசு தாழ்மைப் பண்பில் வளரவும், நம்மை அழைக்கின்றார். தம் மீட்புப் பணி இவ்வுலகில் தொடர்ந்து நடைபெற ஏசு பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தியதை புனித வியாழனன்று நினைவுகூர்கின்றோம். புனித வியாழன் அன்று ஏசு சீடர்களுக்கு பாதம் கழுவதை நினைவு கூறும் வகையில் கோட்டார் சவேரியார் பேராலயத்தல் நேற்று மாலை 6.30 மணிக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. ஆயர் நசரேன் சூசை 13 பேரின் பாதங்களை கழுவினார். பின்னர் திருப்பலி நடந்தது. இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஜெபம் நடந்தது.

 ஏசுகிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாலையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி ெகாண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோட்டார் சவேரியார் ஆலயத்தில் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து ஜெபம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திலும் இந்த நிகழ்வுகள் நடக்கிறது. இதுபோல் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்திலும் சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடக்கிறது. கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நாளை(3ம் தேதி) நள்ளிரவு 11 மணிக்கு ஏசு உயிர்ப்பு திருப்பலி நடக்கிறது.

Tags : Good Friday ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி