×

பா.ஜ., அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குமரியில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் 3500 போலீஸ் குவிப்பு கடலோர கிராமங்களில் கண்காணிப்பு

நாகர்கோவில், ஏப்.2: பிரதமர் மோடி இன்று குமரியில் பிரசாரம் ெசய்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் வந்துள்ளனர்.  ஏற்கனவே தமிழ்நாட்டில் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி, இன்று 3 வது கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று (2ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.
 இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வரும் பிரதமர், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகிறார். பொதுக்கூட்டம் முடிந்து, மாலை 5 மணியளவில் மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.பிரதமரின் வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக டிஜிபி திரிபாதி நேற்று நாகர்கோவில் வந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு பிரதமர் வருவதால், அவரது கார் வரும் வழிப்பாதைகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் யார், யார் தங்கி உள்ளனர். அவர்களின் முழு முகவரி விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பிரதமரின் வருகைக்கு எதிராக  கடலோர கிராமங்களில் ஏதாவது போராட்டங்கள் நடைபெறுகிறதா? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.கொரோனா பரிசோதனைபிரதமர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), ப. ரமேஷ் (குளச்சல்), ஜாண் தங்கம் (பத்மநாபபுரம்), ஜூட் தேவ் (கிள்ளியூர்), ஜெயசீலன் (விளவங்கோடு) மற்றும் பா.ஜ. மாவட்ட தலைவர் தர்மராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன்  உள்பட பா.ஜ., அதிமுக மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள்  பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை  நடத்தப்பட்டுள்ளது.

Tags : Narendra Modi ,Kumari ,BJP- ,AIADMK ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...