×

ஓசூரில் பறக்கும்படை சோதனை வாகன தணிக்கையில் 347 மதுபாட்டில் பறிமுதல்

ஓசூர், ஏப்.2: ஓசூரில் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில் 347 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவின்பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் புஷ்பலதா மற்றும் தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர், காவல்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஓசூர் அருகே தொரப்பள்ளி சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பிற மாநில மதுபான வகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த ஓசூர் திருச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அனுமந்திடம் விசாரித்த போது, உரிய அனுமதியின்றி மது பாட்டில்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. உடனே 347 மதுபாட்டில்களுடன் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அனுமந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ மற்றும் மதுபாட்டில்கள் ஓசூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு