×

ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை, ஏப்.2: ஊத்தங்கரை அருகே, குடிநீர் கேட்டு நேற்று காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி ஊராட்சி புது காலனி மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும், இதுநாள் வரை நீர் ஏற்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பழுதுதடைந்த  மினி டேங்கையும் சீர் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால், ஆவேசமடைந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலி குடங்களுடன் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர், அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர், பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக சமரசப்படுத்தினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அப்போது பெண்கள் கூறுகையில், ‘கட்டி முடித்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் காட்சி பொருளாக மாறியுள்ளது. அதேபோல், மினி டேங்கும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சீர்செய்யாததால், குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தை சீர் செய்யாத அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம்,’ என்றனர்.

Tags : Uttaranchal ,
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்