×

குடியாத்தத்தில் இருந்து மதனப்பள்ளி செல்லும் அரசு பஸ் மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்து பணிமனையை முற்றுகை போலீசார் சமரசம்

குடியாத்தம், ஏப்.2: குடியாத்தத்தில் இருந்து மதனப்பள்ளி செல்லும் அரசு பஸ் மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.குடியாத்தம் அடுத்த சைனாகொண்ட, பலமனேரி சாலையில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விலைநிலங்களில் விளையும் காய்கறிகளை தினந்தோறும் சுற்றுப்புறங்களில் உள்ள நகரப்பகுதிக்கும், ஆந்திர மாநிலத்திற்கும் கொண்டு சென்று விற்று வருகின்றனர்.இந்நிலையில் குடியாத்தத்தில் இருந்து சைனாகுண்டா வழியாக மதனப்பள்ளி வரை 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இவை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் குடியாத்தம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஜெயபிரகாஷ், பாரத் நவீன் குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் குடியாத்தம்- வேலூர் சாலையில் உள்ள போக்குவரத்து அரசு பணிமனையை நேற்று முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் 15க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஊரங்கு அமலில் உள்ள நிலையில் அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட முயன்ற 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gudiyatham ,Madanapalle ,
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...