வேலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் ஏற்பாடு 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் கொரோனா தடுப்பூசி துணை இயக்குனர் தகவல்

வேலூர், ஏப்.2:வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 15 இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடடும் பணி தொடங்கி உள்ளதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்தார்.தமிழகத்தில், சுகாதாரப்பணியாளர்கள், கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள், சட்டசபை தேர்தல் பணியாற்ற உள்ள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையிலான நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத்துறை வெளியிடப்பட்டது.

அதில் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள், கோவின் செயலில் பதிவு செய்து, தடுப்பூசி போட்டு கொள்ள வரலாம். அவ்வாறு பதிவு செய்ய முடியாதவர்கள், நேரடியாகவும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று முதல் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.அதன்படி வேலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று காலை தொடங்கியது.இதுகுறித்து வேலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இன்று முதல் போடும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக 15 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்ட்லென்ட் மருத்துவமனை, சத்துவச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அலமேலுமங்காபுரம், குடியாத்தம் அரசு மருத்துவமனை, ஊசூர், வடுகன்தாங்கல், திருவலம், ஒடுகத்தூர், கல்லப்பாடி, டிடி மோட்டூர் உட்பட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பம் உள்ளவர்கள் வந்து போட்டுக்கொள்ளலாம். வரும்போது, ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி வந்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>