வேலூர் அடுத்த பென்னாத்தூரில் துணை தபால் அலுவலகம் இடமாற்றம் எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை அதிகாரி சமரசம்

அணைக்கட்டு, ஏப்.2: வேலூர் அடுத்த பென்னாத்தூரில் துணை தபால் அலுவகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.வேலூர் தாலுகா பென்னாத்தூர் அடுத்த ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வேலூர் கோட்ட தபால் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு கீழ் கடந்த 35 ஆண்டுகளாக துணை தபால் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தில் பென்னாத்தூர், ஆதிதிராவிடர் காலனி மற்றும் பென்னாத்தூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கணக்கு தொடங்கி பணபரிவர்த்தனை செய்து வருகின்றனர். மேலும் ராணுவ வீரர்கள் தபால்கள் பெறவும், முன்னாள் ராணுவ வீரர்கள், முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள், இந்த தபால் அலுவலகம் மூலம் பென்ஷன் பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த தபால் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், இதனை பென்னாத்தூர் கிராமப்புற பகுதியில் இயங்கி வரும் வங்கியின் அருகே இடமாற்றம் செய்ய தபால் அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு நோட்டீசை நேற்று தபால் அலுவலகத்தில் ஒட்டினர். இதுகுறித்து தகவலறிந்த ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்து பொருட்கள் ஏதும் வெளியே எடுத்து செல்ல முடியாத படி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோஷமிட்டனர்.

தகவலறிந்த அஞ்சல் துறை வேலூர் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர் திருஞானசம்பந்தம் மற்றும் துணை அலுவலர்கள் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவாரத்தை நடந்தினர். அப்போது பொதுமக்கள் அவரிடம் நீங்கள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், நீங்கள் முறையாக ஒரு மனு அளியுங்கள், அதனை நாங்கள், மேலதிகாரிகளிடம் ஆலோசித்து இடமாற்றம் செய்வது குறித்த முடிவை பரிசீலிக்கிறோம். அதுவரை இந்த பென்னாத்தூர் துணை தபால் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படாது என்றார்.

இதையடுத்து பொதுமக்கள் மனு எழுதி அதில் அனைவரும் கையொழுப்பமிட்டு மனுவை வேலூர் தெற்கு கோட்ட கண்காணிப்பாளர் திருநாவுக்கரசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>