நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா திருச்சி காந்தி மார்க்கெட் மீண்டும் மூடலா? அரசு முடிவின்படி நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி, ஏப்.1: தமிழகத்தில் கொரானா மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு மாவட்ட அளவில் 10 என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த 4 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாநாகராட்சி சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் வார்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. காந்தி மார்க்கெட் பகுதியில் இருதினங்களுக்கு முன் 300 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 5 பேரின் சளி மாதிரியை சோதித்ததில் கொரானா தொற்று உறுதியானது. இதில் 4 பேர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள், ஒருவர் பொதுமக்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து வியாபாரிகள் நடத்தி வந்த காந்திமார்க்கெட்டில் உள்ள இரண்டு காய்கறி கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

திருச்சியில் ஏற்கனவே கொரானா தொற்று உச்சத்தில் இருந்தபோது, காந்திமார்க்கெட் மூடப்பட்டு, ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது கொரானா அதிகரிக்க துவங்கியுள்ளதால் காந்திமார்க்கெட் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், ‘மார்ச் 29ம் தேதி காந்திமார்க்கெட்டில் உள்ள 126 பேருக்கு பரிசோதனை நடத்தியதில், நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று (நேற்றுமுன்தினம்) இரண்டு கடைகள் மூடப்பட்டது. விஐபி பிரசாரம் இருந்ததால் காந்தி மார்க்கெட்டில் மீண்டும் பரிசோதனை எடுக்கவில்லை. வாழைக்காய் மண்டியில் நேற்று (நேற்று முன்தினம்) 42 பேருக்கு பரிசோதித்துள்ளோம். இன்று மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளோம்.

வியாபாரிகள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை மாநகராட்சி அமல்படுத்தும். காந்திமார்க்கெட் மூடப்படுமா? இல்லையா என்பது வியாபாரிகளின் கைகளில் தான் உள்ளது’ என்றார்.

Related Stories:

>