திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் காத்திருப்பு போராட்டம் பணி காலம் நீட்டிப்புக்கு எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஏப்.1: பயிற்சி மருத்துவர்களுக்கான பணி காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வியை 4 ஆண்டுகளில் முடிக்கும் மாணவர்கள், அடுத்த ஒரு ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக (சிஆர்ஆர்ஐ) பணிபுரிய வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து, 4 ஆண்டு பயிற்சியை முழுமையாக முடித்தவர்கள், கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கான பணி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே, பயிற்சி முடித்ததற்கான சான்றுகளை வழங்கி, தங்களை பணியில் இருந்து விடுவிப்பார்கள் என பயிற்சி மருத்துவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், பயிற்சி காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது.

அதனால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 89 பயிற்சி மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஒரு ஆண்டாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தங்களை ஒரு ஆண்டுக்கு பிறகு விடுவிப்பார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், மேலும் ஒரு ஆண்டு நீட்டித்திருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களிடம், அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories:

>