சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம், ஏப்.1: 108 வைணவத் தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த வைணவத்திருத்தலம் ஆகும். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இங்கு சொர்கவாசல் தனியாக இல்லை பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்ததாக 3வது தலமாக  சாரங்கபாணித் திருக்கோயில் விளங்குகிறது

இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் கோமளவள்ளி தாயாருக்காண பங்குனி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் 15 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நாள் தோறும் தாயார் பிரகார உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, முதலில் மாலை மாற்றும் நிகழ்வும், தொடர்ந்து ஊஞ்சலில் நலுங்கு வைத்தல் வைபவமும் நடைபெற்ற பின்னர் நாதஸ்வர மேள தாளம் முழங்க திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் மகா தீபாராதணை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி சனிக்கிழமை தாயார் ஏகசிம்மாசன சேவை, விடையாற்றியுடன் இவ்வாண்டிற்காண தாயார் பங்குனி பிரமேற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

Related Stories: