வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 143 போலீஸ் மொபைல் டீம் பூத்களை தேடி அலையும் போலீசார்

வேலூர், ஏப்.1: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்க 143 போலீஸ் மொபைல் டீம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணியிடமாற்றமாகி வந்துள்ள போலீசார் பூத்களை தேடி அலைந்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில், பிரச்சாரக்களமும் அனல் பறக்கிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்கள் தீவிரப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நாளான்று வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,783 வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க எஸ்பி செல்வகுமார் உத்தரவின்பேரில் 143 போலீஸ் மொபைல் டீம் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தேர்தல் நாளான்று வாக்குச்சவாடி மையங்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அன்றைய தினமும் முழுவதும் மொபைல் டீம் போலீசார், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்தல் நேரம் என்பதால் பணியிடமாற்றமாகி வந்துள்ள போலீசார் வேலூர் மாவட்டத்தில் உள்ளதால், அவர்கள் தேர்தலுக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் எங்குள்ளது என்று தேடி அலைந்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்க 143 போலீஸ் மொபைல் டீம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தலுக்காக பணியிடமாற்றமாகி வந்துள்ள போலீசார் மற்றும் ஏற்கனவே பணியிடமாறுதலாகி வந்த போலீசார் ஏரியா தெரியாததால், பணி ஒதுக்கப்பட்ட பூத்களை தேடி அலைய வேண்டியுள்ளது. எனவே தற்போதே பூத்கள் எங்குள்ளது என்று பார்த்து வைத்துக்கொள்கிறோம், என்றனர்

Related Stories:

>