×

தேர்தல் புகார்களை அளிக்கும் சி-விஜில் ஆப் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி, ஏப். 1:   தேர்தல் புகார்களை அளிக்கும் சி-விஜில் ஆப் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. ஊட்டி எச்ஏடிபி., விளையாட்டு மைதானத்தில் சி-விஜில் செயலி குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தேர்தல் செலவின பார்வையாளர்கள் விஷால் எம் சனப், அமர்சிங் நெஹ்ரா ஆகியோர் பூங்கா பணியாளர்களுடன் வரிசையில் நின்று தேர்தல் தொடர்பான புகார்களை தவறாமல் தெரியப்படுத்துங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சி-விஜில் செயலி குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் பூங்கா பணியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நோடல் அலுவலர் பாபு, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஜெயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...