×

அரவக்குறிச்சியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பேருந்து நிறுத்தத்தில் கோடை கால நிழல்பந்தல் அமைக்க வேண்டும்

அரவக்குறிச்சி, ஏப்.1: அரவக்குறிச்சியில் அனல் காற்றுடன் கடும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நிழலுக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். பேரூந்து நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கோடைகால நிழல் பந்தல் அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே அரவக்குறிச்சி பகுதியில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைக்கின்றது. நேற்றுமுன்தினம் வெயில் அதிக அளவில் இருந்தது, மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அக்கினி வெயிலின் காரணமாக வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும்.

இந்நிலையில் அரவக்குறிச்சியிலிருந்து வேலைக்காக வெளியூர் செல்லுபவர்கள், வியாபார நிமித்தமாக வெளியூர் செல்லும் வணிகளர்கள், வெளியூரிலிருந்து மருத்துவமனைகளுக்கு வரும் கிராம நோயாளிகள், தாலுகா அலுவலகம், காவல்நிலையம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், வங்கிகள் என்றுபல்வேறு அலுவலகங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வேலை நிமித்தமாக அரவக்குறிச்சி வருகின்றனர். இவர்கள் வேலை முடிய மதியமாகின்றது. இவர்கள் திருப்பிச் செல்லுவதற்காக பேரூந்து நிறுத்தங்களில் பஸ் வரும் வரை வாட்டி வதைக்கும் வெயிலில் வெட்ட வெளியில் நின்று காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெயில் கடுமையின் கரணமாக பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆகையால் அரவக்குறிச்சியிலுள்ள பேரூந்து நிறுத்தம் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களான தாலுகா அலுவலம் அருகில், ஏவிஎம் கார்னர் மற்றும் மேற்கே பேரூந்து நிலைய பஸ் நிறுத்தம், போலீஸ்நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி கோடைகால நிழல் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Weil ,Aravakurichi ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...