ஜவுளி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திமுக வேட்பாளர் முத்துசாமி பிரசாரம்

ஈரோடு, ஏப். 1:   ஈரோட்டில்  ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று திமுக  மேற்கு தொகுதி வேட்பாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மேற்கு  தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி நேற்று சூளை, ஈபிபீ நகர்,  பெரியசேமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்  சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளர் முத்துசாமி  பொதுமக்களிடம் பேசியதாவது: விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க  நிலையை சரி செய்ய மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  ஈரோடு மாநகர் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு காளைமாட்டு சிலை  பகுதியில் இருந்து சூரம்பட்டி நால்ரோடு வழியாக, ப.செ.பார்க், மணிகூண்டு  வழியே பஸ் ஸ்டாண்டு செல்ல இரு மேம்பாலங்கள் கட்டப்படும்.

சுற்றுச்சூழலை  பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கப்படும். ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில் நுட்ப அறிவியல்  பல்கலைக்கழகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல்  பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும். ஈரோடு மாநகராட்சியுடன்  இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக  உள்ளது. இது போன்ற பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும்.  மாநகரில் உள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக காலை, மாலை நேரங்களில்  சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்துள்ள சாலைகள்  செப்பனிடப்படும் என்பதோடு சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். எனவே,  வருகிற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், போட்டியிடும் எனக்கு  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முத்துசாமி பேசினார்.

Related Stories: