×

அதிமுக ஆட்சியில் நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் வளர்ச்சி பெற்றுள்ளது

பவானி, ஏப். 1:    கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நகரங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமப்புறங்களில் கிடைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என பவானி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஆலத்தூர், ராமநாதபுரம், தாசநாயக்கனூர், உப்புக்காரப்பள்ளம், மணக்காட்டூர், செட்டிபாளையம், செல்லக்குட்டிபாளையம், அண்ணா நகர், செல்வநகர், தயிர்பாளையம், பழையபாளையம், காமராஜர் நகர், மூலபாளையம், ராமகவுண்டன்வலசு, பெரியபுலியூர், எம்ஜிஆர் நகர், சூளைமேடு, காசிலிங்கபுரம், ஜேஜே நகர் உள்பட 39 கிராங்களில் அமைச்சர் கருப்பணன் கொளுத்தும் வெயிலில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, வாக்காளர்கள் மத்தியில் கருப்பணன் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பிற மாநிலங்கள் வியக்கும் வகையிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நகர்புறங்களுக்கு இணையான வளர்ச்சியை கிராமங்களும் அடைந்துள்ளன. தார்சாலை மேம்பாடு செய்யப்பட்டதால் போக்குவரத்து எளிதாகியுள்ளது. கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தெருவிளக்கு, கழிப்பிடம் என அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ.5 லட்சமாக காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் 100 நாட்களாக இருந்த வேலைத்திட்டம், 150 நாட்களாக அதிகரிக்கப்படும். கிராமப்புறங்களில் காங்கிரீட் வீடும், நகர்புறங்களில் அடுக்கு மாடி வீடுகளும் கட்டும் அம்மா இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டி தரப்படும்.

ஏழை, எளிய மண மக்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்துடன் பட்டாடை, வெள்ளிக்கொலுசு, வீட்டு பொருட்களுடன் அம்மா சீர்வரிசை வழங்கப்படும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டணமில்லா இரு சக்கர வாகனப் பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலை ஊட்டச்சத்தாக பால், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உழவு மானியமாக ரூ.7,500 உதவித்தொகை, கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்படும். பல்வேறு திட்டங்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். இந்த பிரசாரத்தில் பவானி ஒன்றிய குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜ், பவானி தெற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், பெரியபுலியூர் ஊராட்சி தலைவர் தங்கமணி ராசு, ஆலத்தூர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பாமக, பாஜ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை