×

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா அதிகரிப்பு சிஎம்டிஏ அதிகாரி திடீர் ஆய்வு

அண்ணாநகர், ஏப்.1: கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா அதிகரிக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே மார்க்கெட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் வேலை செய்யும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கடந்த 29ம் தேதி கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி, தகவல் அறிந்ததும் சிஎம்டிஏ அதிகாரிகள் வந்து அவர்கள் பணியாற்றிய கடையில் கிருமிநாசினி தெளித்ததுடன் கடைக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிஎம்டிஏ அதிகாரி சுஞ்சோங்கம் ஐடக் சீரு கோயம்பேடு மார்க்கெட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா என்று கூலி தொழிலாளர்கள், வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். மார்க்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் உடன்  இருந்தனர்.

Tags : CMDA ,Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...