தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று ஒரே பள்ளியில் 7 பேருக்கு பாசிட்டிவ்

தேனி, ஏப். 1: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதன் பாதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பெரியளவில் இருந்தது. பின்னர் இப்பாதிப்பானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படிப்படியாக குறைய தொடங்கியது. இதுவரை தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 17 ஆயிரத்து 291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்து 31 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 207 பேர் வரை இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 53  பேர் தேனி ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த சில மாதங்களாக நாள்தோறும் மிகக்குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருந்தது. பின்னர் தினமும் 5 பேர், 9 பேர், 6 பேர் என மிதமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இது தேனி மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிற வகுப்பு ஆசிரிய, ஆசிரியைகளும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இப்பள்ளியில் பணிபுரியும் ஓரிரு ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து இந்த ஆசிரியர்கள் பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் பிற ஆசிரிய, ஆசிரியைகளை பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், தற்போது செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதுடன், கொரோனா அறிகுறி உள்ள மாணவ, மாணவியர்களுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>