×

பணி நீக்கியவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார், ரேஷன் கார்டு வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்

திருவள்ளூர், ஏப் .1: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் ஊராட்சியில் கார் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்ச்சாலை இயங்கி வந்தன. இந்த தொழிற்சாலை, பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கைமாறியது. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினர் 22 பேர், ஒப்பந்த தொழிலாளர்கள் 158 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இந்த தொழிற்சாலை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கைமாறினாலும் நிலம் வழங்கிய விவசாயிகளின் 22 குடும்பத்தினருக்கும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 158 பேருக்கும்,  வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிற்சாலை முன்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன்,

ஏஐடியுசி மாநில செயலாளர் கே.ரவி ஆகியோர் தலைமையில், விவசாய சங்க தலைவர் ஆறுமுகம் சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் வி.சரவணன், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் எ.சீனிவாசன், விவசாய சங்க துணை செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  திரண்டு வந்த தொழிலாளர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி  துரைப்பாண்டியன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார் ரஜினிகாந்த் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா சக்திவேல் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.  இதனைத் தொடர்ந்து கலெக்டர் பா.பொன்னையாவிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர்.

அவர்  பேச்சுவார்த்தை நடத்தி விட்டு தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நாளை அலுவலகத்திற்கு வருகை தருமாறு உத்தரவிட்டார். பிறகு வருகின்ற 5ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை நுங்கம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் பிரபா, அதிகத்தூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முரளி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்தனர்.

Tags : Aadhar ,Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்