வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்.பி ஆய்வு

திருவள்ளூர், ஏப்.1:  தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம், வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட  தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன்  ஆகியோர் நேற்று  ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர்  கூறியதாவது :ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து வரும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநில காவல் பாதுகாப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு காவல் படையினரால் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருப்பு அறையில்  வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது திறக்கப்படும்.

அனைத்து இருப்பு அறைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக மரப்பலகை மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட அடுக்குகளில் வைப்பதற்கு அனைத்து அடுக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் காவலர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வரும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை நிறுத்துவதற்கான நிறுத்துமிடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், மையத்தை முழுமையாக 24 மணிநேரமும் கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைகளுக்காக ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மையமும்,

திருவள்ளுர் மற்றும் திருத்தணி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மையமும், அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மையம் என மூன்று மையங்களாக பிரித்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படவுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இரும்பு வளையங்கள் மூலம் கட்டைகள் அடைக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களில் எடுத்துச் செல்வதற்கு தனியாக வழித்தடங்களும், அரசியல் கட்சிகளின் முகவர்கள் செல்வதற்கு தனி வழித்தடங்களும் என 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளது.  ஒவ்வொரு மையத்திலும் செய்தியாளர்களுக்கான ஊடக மையம் தனித்தனியாக அமைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா கூறினார்.

Related Stories:

>