×

தேனியில் மைக்ரோ அப்சர்வர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேனி, ஏப். 1: தேனியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மைக்ரோ அப்சர்வர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சி முகாமிற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். பெரியகுளம், போடி சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரபுடட்டா டேவிட்பிரதான், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ரவீந்தர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியின்போது, ‘மைக்ரோ அப்சர்வர்கள் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முதல் நாளன்று வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றதற்கான தகவலை தேர்தல் பொதுப்பார்வையாளருக்கு தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறதா, வேட்பாளர்களின் முகவர்களின் வருகையினையும், பின்னர் கட்டுப்பாட்டு கருவியைமீண்டும் சரிசெய்து, பூஜ்ஜியம் நிலையில் உள்ளதா என்பதையும் கண்காணித்திட வேண்டும்.

வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்பதையும் வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்களிடம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை கொண்டு வருகிறார்களா என்பதையும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வராத வாக்காளர்களின் எண்ணிக்கையையும் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்திலும், மாலை 6 மணிக்கு மேல் எத்தனை வாக்காளர்கள் வரிசையில் நின்றுவாக்களித்தனர் என்பதையும், ஒரு பள்ளியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள்  இருந்தால் சுழற்சி முறையில் சென்றுகண்காணித்திட வேண்டும்.

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடியில் வழங்கப்பட்டுள்ள்17 ஏ படிவத்தின்படி, பதிவுகள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பராமரிக்கப்படுகிற  பதிவேடுகளில் உள்ள விபரங்கள்ஒரே மாதிரியாக உள்ளதா அல்லது மாறுபட்டு உள்ளதா என்பதையும், வாக்குப்பதிவின்போது தேர்தல் அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறார்களா என பார்வையிட்டு சீரான இடைவெளியில் தேர்தல் பொதுப்பார்வையாளருக்கு தகவல் அளித்திட வேண்டும். மேலும், மண்டல தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்யும் நேரத்தினையும், வாக்குப்பதிவு முடிவுற்றபின் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று அதற்குரிய ஆவணங்களை தேர்தல் பொதுப்பார்வையாளர்களிடம் அறிக்கை சமர்பித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக மைக்ரோ அப்சர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Theni ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு