×

நான்கு தொகுதிகளிலும் இரண்டாம் சுற்று பிரசாரம் தீவிரம் விடுபட்ட பகுதிகளுக்கு படையெடுக்கும் வேட்பாளர்கள்

சிவகங்கை, ஏப்.1: சிவகங்கை மாவட்டத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இரண்டாம் சுற்று வாக்குச்சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு சுற்று பிரச்சாரத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முடித்து விட்டனர். வேட்பாளர்கள் இல்லாமலும் கட்சியினர் தேர்தல் அறிக்கை வழங்குவது, தினமும் வாக்குகள் கேட்டு பகுதி வாரியாக செல்வது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி விடியலை நோக்கி என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார். மீண்டும் நேற்று நான்கு தொகுதிகளிலும பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிப்ரவரி மாதம் மற்றும் மார்ச் 18ல் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அமமுக, மநீம வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகப்படியான கிராமங்களை கொண்ட மாவட்டமான சிவகங்கையில் அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ஒரு நாளைக்கு சுமார் 50 கிராமங்கள் வரை வேட்பாளர்கள் பிரச்சாரத்தை முடித்துள்ளனர். முக்கிய கட்சி வேட்பாளர்கள் முதற்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்த நிலையில் தற்போது விடுபட்ட ஊர்களுக்கு செல்வது, சில பகுதிகளுக்கு மீண்டும் செல்வது என இரண்டாவது சுற்று வாக்குச்சேகரிப்பில் தீவிரம்காட்டி வருகின்றனர்.

பிரச்சாரம் வரும் ஞாயிறன்று முடிவடையை உள்ளதால் சமுதாய பெரியவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் இல்லாமல் வாகனங்களில் மைக் செட் பிரச்சாரம், எல்இடி திரை மூலம் பிரச்சாரம் என மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம் நடந்து வருகிறது. கட்சியினர் கூறுகையில், இந்த தேர்தலில் வெயில் கடும் அச்சுறுத்தலாக உள்ளது. அதனால் பகல் நேரத்தில் பிரச்சாரம் செய்வது கடினமாக உள்ளது. பிரச்சாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதால் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...