×

பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்பு தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சிவகங்கை, ஏப்.1:சிவகங்கை மாவட்டத்தில் தேர்தலையொட்டி ஏற்கனவே போலீசார் சார்பில் பிரச்சினைக்குரிய கரும்புள்ளி கிராமங்கள், பதட்டமான கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்சினை ஏற்படும் கிராமங்கள், சாதி, மத ரீதியாக பிரச்சினைக்குரிய கிராமங்கள், ரவுடிகள் லிஸ்ட், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர். மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஸ்டேசன்வாரியாக அந்த ஸ்டேசன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சினைக்குறிய கிராமங்கள், நபர்கள், ரவுடிகள் லிஸ்ட் சேகரிக்கப்பட்டது. ஏற்கனவே தேர்தல் காலங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது என்ன பிரச்சினைகளுக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலின் போது மாவட்டம் முழுவதும் 120 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக இருந்தன. உள்ளாட்சி தேர்தலின் போது பிரச்சினைகள் ஏற்பட்ட மேலும் 15 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டன. தற்போதைய சட்டமன்ற தேர்தலில் பதட்டமானவையாக 163 வாக்குச்சவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மைக்ரோ அப்சர்வர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்தல் அலுவலர் ஒருவர் கூறுகையில், அதிக வாக்குப்பதிவு மற்றும் குறைவான வாக்குப்பதிவு இடங்கள் இரண்டுமே பிரச்சினைக்குரியதாகவும், பதட்டமானவையாகவும் கணக்கில் எடுத்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். இங்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு, மைக்ரோ அப்சர்வர் நியமனம், வெப் கேமரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Election Commission ,
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!