×

சேடபட்டி, மேலூர் கோவில் திருவிழாவில் தீச்சட்டிகளுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பேரையூர், ஏப்.1: சேடபட்டி காளியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கடந்த ஒருவாரம் விரதம் இருந்து காப்புகட்டி திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் காளியம்மன் கரகம் செய்யப்பட்டு கண் திறக்கப்பட்டு அம்மனை முளைப்பாரி ஊர்வலத்துடன், கால்பாதம், கைபாதம், தவந்தோடும் பிள்ளை, உருவங்கள் கொண்ட மண் பொம்மைகள் அம்மன் நேர்த்தி கடனாக பக்தர்கள் கொண்டு வந்தனர். சேடபட்டி முக்கிய வீதிகளில் பவனி வந்து காளியம்மன் கோவில் சன்னிதானத்திற்கு அம்மனை கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை பக்தர்கள் தீச்சட்டிகள் எடுத்து வந்தனர். 21 தீச்சட்டிகளுடன் பக்தர்கள் காளியம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தி பரவசத்துடன் இறங்கினார்கள்.

கோவிலை வலம் சுற்றி பூக்குழியில் தொடர்ந்து மூன்று முறை இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினார்கள். கரும்பில் குழந்தைளுக்கு தொட்டில் கட்டியும் தீச்சட்டியுடனும், உருண்டு கொடுத்தல், உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினார்கள். நேற்று மாலை காளியம்மன் கோவிலிலிருந்து அம்மன் கரகம் எடுக்கப்பட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன் ஊர் அருகிலுள்ள காளியம்மன் கோவில் கிணற்றில் அம்மனையும், முளைப்பாரியும் கரைத்தனர். மேலூர் அருகே திருவாதவூர் திரவுபதி அம்மன் கோயில் விழாவில், நேற்று முன்தினம் இரவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

Tags : Melur Temple Festival ,Chedapatti ,
× RELATED பாம்பு கடித்து மூதாட்டி பலி