×

2183 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்



தர்மபுரி, ஏப்.1: தர்மபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மநீம, தேமுதிக, அமமுக உள்ளிட்ட மொத்தம் 76 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இந்த 5 தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 60 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 420 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 சட்ட மன்ற தொகுதிகளிலும் 12,810 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும்பணி தொடங்கியது. தர்மபுரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும்பணி நடக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து, ஐந்து தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. 5 தொகுதிகளுக்கும் மொத்தம் 2183 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. 1817 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் 2183 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம், பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா