×

குமரியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஓய்வு பெற்ற போலீசார், ராணுவத்தினர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்

நாகர்கோவில், ஏப்.1: குமரியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு  நேற்று (31ம்தேதி) நடைபெற்றது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களுக்கு கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதியை சேர்ந்தவர்கள் மார்த்தாண்டம் நேசமணி கலைகல்லூரியிலும், கிள்ளியூர் மற்றும் குளச்சல் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு கருங்கல் பெத்லகேம் பள்ளியிலும் வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை வாக்குகளை பதிவு செய்வதற்காக காவல்துறையினர் 8 மணி முதலே அந்தந்த மையங்களுக்கு வர தொடங்கினர். நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கட்டிடங்களில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக தான் வாக்குப்பதிவு தொடங்கியது.

பணியில் உள்ள போலீசார் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினரும் தபால் வாக்கு பதிவு செய்ய வந்திருந்தனர். ஆனால் கார்மல் பள்ளியில் ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினருக்கு வாக்குச்சீட்டு இல்லை என கூறினர்.  இதனால் வாக்களிக்க முடிய வில்லை. அங்கிருந்த தேர்தல் பணியாளர்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள் என  கூறினர். இதனால் காலை முதல் நீண்ட நேரம் காத்திருந்த ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதே போல் பணியில் உள்ள பல போலீசாருக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி திருப்பி அனுப்பினர்.

இது குறித்து ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க செயலாளர் சுகுமாரன் கூறுகையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத்த வேண்டுகோளின்படி நாங்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக விருப்பம் தெரிவித்து இருந்தோம்.  தபால் வாக்கு பதிவு செய்ய அந்தந்த காவல் நிலையங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான பாரம் 12, 12ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்திருந்தோம். ஆனால் எங்களுக்கான வாக்குச் சீட்டு கொடுக்கப்படவில்லை. இதனால் வாக்களிக்க முடியவில்லை. இதே நிலை தான் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ளது. நாங்கள் வாக்குகளை பதிவு செய்தால் மட்டுமே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும் என்றார்.
முன்னதாக கார்மல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்குப்பதிவை கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

செல்லாத ஓட்டாக மாற்ற திட்டம்?
தபால் வாக்கு பதிவு செய்தவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட கவரை அதற்கென உள்ள பெட்டியில் போட வேண்டும். இவ்வாறு முத்திரையிடுவதற்கு முன், ஓட்டு சீட்டு வைத்துள்ள கவரின் மேல் பகுதியிலும், கடைசியாக உள்ள கவரின் மேல் பகுதியிலும் கையெழுத்திட வேண்டும். இந்த இரு கையெழுத்துக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு கவரில் கையெழுத்து இல்லை என்றால் கூட அது செல்லாத ஓட்டாக கணக்கெடுக்கப்படும். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் போலீசாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வில்லை. கார்மல் பள்ளி வாக்கு சாவடியில் காலை 10  மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பகல் 12.30க்கு அங்கிருந்த அலுவலர் கையெழுத்து போடுவது குறித்து கூறினார். அப்போது ஓட்டை பதிவு செய்து கவரை பெட்டியில் போட்ட பலர், நாங்கள் வெளிப்பக்க கவரில் கையெழுத்து இடவில்லை என்றனர். அதற்கு அதிகாரி, இனி ஒன்றும் செய்ய முடியாது. தொகுதி தேர்தல் அலுவலர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...