மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி ஏப்.3ல் குமரியில் பிரசாரம்

நாகர்கோவில், ஏப்.1: குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி ஏப்ரல் 3ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற ஏப்ரல் 3ம் தேதி காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குமரி மாவட்டம் வருகை தருகிறார். முதல் முறையாக அவர் ஒரு அரசியல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் பங்கேற்கிறார். நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொதுக்கூட்டமாக அமையும். தமிழகத்தில் பிரியங்கா காந்தியின்  முதல் அரசியல் நிகழ்ச்சி இதுவாகும்.

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. பிரியங்கா காந்தியின் பிரசாரம் அதற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமையும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அது ஒரு மிகப்பெரிய, சிறப்பான வெற்றியாக இருக்கும். மத்திய அரசு மக்களை பிரித்தாளும்  வேலையை செய்துவருகிறது. அதிமுக கூட்டணியுடன் பாஜ இணைந்துள்ளது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தி இந்த தேர்தலில் வீழ்த்தும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது கடந்த தேர்தலில் அவரது தந்தை பெற்ற  வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழகம் வருகின்ற பிரியங்கா காந்தி அன்று காலை சென்னை பெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் நாகர்கோவிலில் மாலை 3.30 மணிக்கு நடை பெறுகின்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பேசுகிறார்.

தேர்தல் ஆணையம் அவர்களின் வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேஷ்குமார்  எம்எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் வேட்பாளர்கள் விஜயதரணி, பிரின்ஸ், விஜய வசந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கட்சியினர் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மைதானத்தை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கே.டி.உதயம், நவீன்குமார், லாரன்ஸ், தாரகை கத்பட், கே.ஜி.ரமேஷ்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>